கட்சிக்கு ஒரு தலைமை … ஆட்சிக்கு ஒரு தலைமை … கொள்கைகளை மட்டுமே முழங்கி நழுவிய ரஜினி..! கட்சி தொடங்குவது எப்போது?
அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று அறிவித்த 3 வருடங்களுக்கு பிறகு, இன்று தனது அரசியல் பயணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப் போவதாக ரஜினி அறிவித்தது முதலே தமிழக அரசியல் களம் பரபரப்பாகி விட்டது. நிச்சயம் கட்சி பற்றிய அறிவிப்பு தான் என்று அவரது ரசிகர்களும் ஏக உற்சாகம் அடைந்து விட்டனர்.
சினிமா மட்டுமின்றி தமது இத்தனை ஆண்டுகால பொது வாழ்க்கையில் ரஜினி அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு எதுவும் நடத்தியதேயில்லை. போகிற போக்கில், விமான நிலையத்திலோ, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லுமிடங்களிலோ செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும். எதையாவது சர்ச்சையான கருத்துகளை ஓரிரு வரியில் சொல்லி விட்டு செல்வார். அல்லது தனது வீட்டின் முன் செய்தியாளர்களை நிற்க வைத்து ஓரிரு நிமிடம் பேட்டியளிப்பது தான் ரஜினியின் வழக்கம்.
ஆனால் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்போ, அதிகாரப்பூர்வமாக ஒரு நாள் முன்னதாகவே அறிவிப்பு செய்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இதனால் தமது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்து செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். இதனால் ரஜினி தனது இல்லத்திலிருந்து புறப்பட்டது முதல் ஓட்டலுக்கு செல்லும் இடம் வரை மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
செய்தியாளர் சந்திப்பில், விறுவிறுவென மேடையேறிய ரஜினி மைக் பிடித்து பேச ஆரம்பித்தார். அவர் பேசியதன் சாராம்சம் இதுதான்:

கடந்த வாரம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு விசயத்தில் திருப்தியில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றம் என்று பேசியது ஊடகத்தில் பலவிதமாக வெளிவந்தது.
நான் பேசியது மாவட்ட செயலாளர்கள் மூலம் வெளிவரவில்லை. அவர்களுக்கு என் நன்றி. என்னைப் பற்றி வெளியாகி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு.
25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டே இருப்பதாக சொல்கின்றனர். அது தவறு.நான் அரசியலுக்கு வருவேன் என சொன்னது 2017 டிசம்பரில் மட்டுமே. அதற்கு என் ஒரு போதும் நான் சொன்னதே இல்லை.
2017-ல் சிஸ்டம் சரியில்லை சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறினேன். அதைத் தான் இப்போதும் கூறுகின்றேன்.சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது, மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியலில் நிலைத்தன்மை இல்லாத சூழலில், என்னை வாழவைத்த மக்களுக்காக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளான
திமுக, அதிமுகவில் 50 ஆயிரத்துக்கும் மேலாக கட்சிப் பதவிகள் உள்ளது. அது தேர்தல் நேரத்திற்கு மட்டுமே தேவை. தேர்தலுக்கு பின் அவை தேவையில்லை. தனது கட்சி ஆட்சிக்கு வந்த பின், தான் ஆளுங்கட்சி ஆள் என்ற அடிப்படையில் டென்டரில் இருந்து எல்லா விதத்திலும் ஊழலுக்கு வழிவகுப்பார்கள்.
நான் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்ததும், தேர்தல் நேரத்தில் என்ன பதவி தேவையோ அதை மட்டுமே தொண்டர்களுக்கு கொடுப்பேன். இதுதான் நான் அரசியலுக்கு வந்த செய்யவுள்ள மாற்றம்.
தேர்தல் சமயத்தில் ஒரு கட்சிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் தேவை.
தேர்தல் முடிந்த பிறகு ஒரு கட்சிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பதவிகள் தேவை இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகு ஆளும்கட்சி பிரமுகர்கள் கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களில் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. சிலர் கட்சிப் பதவிகளை தொழிலாகவே செய்கிறார்கள், அவர்களுக்கு வேறு வேலையே இல்லை.
நான் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் சமயத்தில் மட்டும் கட்சிக்கு புதிய பதவி, தேர்தல் முடிந்த பிறகு அந்த பதவிகள் தேவையில்லை நான் ஆரம்பிக்கும் கட்சியில் தேவையான அளவிற்கு மட்டுமே நிர்வாகிகளை வைத்துக் கொள்ளப்போகிறேன்.
அடுத்ததாக இப்போது சட்டப்பேரவையில் வயதானவர்கள் தான் அதிகம் பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர்.50, 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே எம்எல்ஏக்களாக உள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகள் தான் குறைந்த வயதில் எம்எல்ஏக்களாகின்றனர்.
எனது கட்சியில் 60 முதல் 65 சதவீத எம்எல்ஏ சீட்டுகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேறு கட்சியில் உள்ள திறமையானவர்கள் வந்தால் அவர்களுக்கு 30 முதல் 35 சதவீத எம்எல்ஏ சீட்டுகள். ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகளை அரசியலுக்கு அழைத்து வர உள்ளேன்.
இளைஞர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டப்பேரவைக்கு செல்வது புது மின்சாரம் பாய்ச்சுவது போல் இருக்கும்.இளைஞர்கள், திறமையானவர்கள் சட்டப்பேரவைக்கு செல்ல நான் ஒரு பாலமாக இருப்பேன்.
மூன்றாவதாக, தேசிய கட்சிகளை தவிர மாநில கட்சிகளில் ஒரே நபர் கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளனர். கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு கட்சித் தலைமையில் இருப்பவர், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கண்காணிக்க வேண்டும்.கட்சித் தலைமை கொடுக்கும் ஆலோசனைகளை செயல்படுத்துவது ஆட்சியில் இருப்பவர்களின் கடமை.
முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை 1996ல் பிரதமர் உள்ளிட்டோர் இரண்டு முறை அழைத்து, வற்புறுத்தி கேட்டும் முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவிட்டேன். முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை.
இளைஞனாக, படித்தவனாக, தொலைநோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும் ஆட்சித் தலைமை சரியாக இல்லை என்றால் கட்சித் தலைமை தூக்கி எறிய வேண்டும்.ஆட்சியில் இருப்பவர்களை கட்சித் தலைமையில் உள்ளவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது.

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நினைத்தேன்.
கட்சியில் பதவிகள் நிரந்தரமாக இருக்காது என்று நான் கூறுவதை பலர் ஏற்கவில்லை. முதலமைச்சர் வேட்பாளராக நான் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் என்னிடம் கூறினர்.
நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றால் என் ரசிகர்கள் கூட ஏற்கமாட்டார்கள் என்று என்னிடம் கூறினர்.நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை என் மாவட்டச் செயலாளர்கள் கூட ஏற்கவில்லை.. முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று நான் 2017ம் ஆண்டே கூறியுள்ளேன்
2017ம் ஆண்டே முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை இல்லை என்று கூறியுள்ளேன்.
மாற்று அரசியல் கொண்டு வர வேண்டும், நல்ல அரசியல் தலைவர் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவைப் போல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தலைவர்கள் தான் தமிழக அரசியலை ஆட்கொண்டிருந்தனர். தமிழகத்தில் தற்போது திறமையான தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?
முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான். அதுதான் உண்மையான வியூகம். மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர் தற்போது இல்லை. ஆளுமைமிக்க தவைரின் வாரிசு என்று நிரூபிக்க முயல்பவரை சந்திக்க வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத கட்சி இப்போது அசுர பலத்துடன் உள்ளது. தற்போது ஆட்சி அதிகாரத்தில் முழு கஜானாவுடன் இருப்பவர்களை தேர்தல் களத்தில் சந்திக்க வேண்டும்.
இப்படி அசுர பலத்துடன் இருக்கும் 2 மிகப்பெரிய ஜாம்பவான்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. திமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் கலைஞருக்காகவும் வாக்களித்தனர். அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் ஜெயலலிதாவுக்காகவும் வாக்களித்தனர். அந்த நிலை இப்போது இல்லை. வெற்றிடம் உள்ளது.
எனவே, அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. இது தான் சரியான தருணம். இதனால் இப்போது தான் தமிழக அரசியலில் புரட்சி வெடிக்க வேண்டிய தருணமிது.
எனக்கும் இப்போதே 71 வயதாகிவிட்டது. இப்போது விட்டால் அடுத்த முறை ஒரு வாய்ப்பு கிடைக்கும் முடியும் என்ற நிலையில் நான் இல்லை. என்னுடைய இந்த கருத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்லுங்கள். மக்களிடம் எழுச்சி ஏற்படுத்துங்கள். எழுச்சி அலை எழும் என்று நம்புகிறேன்.
இப்படி மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக மேடையில் முழக்கமிட்ட ரஜினி, செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப எழுந்த போது, தற்போதைக்கு கேள்வி – பதில் இல்லை கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு விறுவிறுவென நடையை கட்டினார்.
கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன் தான் வைத்துள்ள திட்டங்களையும், கொள்கைகளையும் ரஜினி முழங்கி விட்டுச் சென்றுள்ளது, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும், ரஜினி கூறிய இந்தக் கருத்துகளும் தமிழக அரசியலில் பெரும் விவாதமாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




