வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகம் சென்னை ராயப்பேட்டை மணிக் கூண்டு அருகே புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து கட்சிக் கொடியேற்றினார். இந்த திறப்பு விழாவில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இந்த கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமைந்து மாபெரும் வெற்றி பெறும்.
அமமுகவுக்கு பொதுச் சின்னத்தை மிக விரைவில் தேர்தல் ஆணையம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
சசிகலா மிக விரைவில் சிறையில் இருந்து வெளிவர சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அவர் வெளியில் வந்த பிறகு எங்களுடன் தான் இருப்பார். ரஜினியின் கட்சி, கொள்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து .அது பற்றி இப்போதைக்கு கருத்து கூறுவது சரியாகாது.
வடிவேலு மிகப்பெரிய ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால், அவர் தற்போது ஒதுங்கி இருக்க காரணமே தற்போது தமிழகத்தில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வந்து விட்டார்ர்கள் என்பதே காரணம் என தமிழக அமைச்சர்கள் பலரை சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் கிண்டல் செய்தார்.