“தமிழகத்தில் யாருக்கும் கொரானா பாதிப்பு இல்லை!” ஒரே ஒரு நபரும் குணமடைந்து விட்டார் .! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!!

தமிழகத்தில் யாருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், கொரானா பாதிப்புக்கு ஆளாகிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நபரும் தீவிர சிகிச்சையால் குணமடைந்து விட்டதாகவும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் பீதியை கிளப்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை 57 பேருக்கு இந்த அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்திலும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த நோய்த்தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

ஓமன் நாட்டில் இருந்து வந்த அந்த நபருக்கு சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவில் இருந்து வந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கும் கொரானா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரத்த மாதிரி சோதனையில், அந்த சிறுவனுக்கு கொரானா தொற்று இல்லை என்பது தெரிய வந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

 

இதனால் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகள் அனைவரிடமும் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தமிழக சுகாதாரத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர் . சி.விஜயபாஸ்கர், இன்று கொரானா குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் தற்போது கொரானா பாதிப்பு யாருக்கும் இல்லை. பல்வேறு நபர்களிடம் சந்தேகத்தின் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனைகளிலும் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

கொரானா பாதிப்புடன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபரும் தற்போது குணமடைந்து விட்டார். இதனால் கொரானா நோய்த் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply