மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி நாளை மீண்டும் அவசர ஆலோசனை…! கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா..?
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை ரஜினி நாளை வெளியிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரஜினிகாந்த் தயாராகி வருவதாகவே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இடைவெளியே இருப்பதால் கட்சி தொடங்குவது பற்றி தீவிர ஆலோசனையிலும் இறங்கி விட்டார். கடந்த வாரம் 5-ம் தேதி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் ரன்னி ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சி கட்டமைப்பு குறித்தும் தேர்தலில் வாய்ப்பு யாருக்கு என்பது குறித்தும், வெற்றி பெற்றால் தான் முதல்வராக போவது இல்லை; கட்சிக்கு தலைமையேற்று ஆட்சியை வழிநடத்துவேன் என்றும் இந்தக் கூட்டத்தில் ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியானது.
மேலும் கடந்த வாரம் நடந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கட்சி தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினாலும் ஒரு விஷயத்தில் மட்டும் தமக்கு ஏமாற்றம் என தெரிவித்திருந்தது பெரும் விவாதப் பொருளாக மாறியது. அந்த ஏமாற்றம் என்ன என்பது குறித்து ரஜினி வெளிப்படையாக தெரிவிக்காததால், இந்த ஏமாற்றத்தை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்காமலே கூட ரஜினி ஏமாற்றி விடுவாரோ என்று கூட விவாதங்கள் சூடாகின.

இந்நிலையில், கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், தனக்கு நெருக்கமான சில மூத்த அரசியல் தலைவர்களை வீட்டுக்கு வரவழைத்து ரஜினி தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுறது. இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி ஆகியோருடனான சந்திப்பு வெளியுலகுக்கு தெரிந்தது என்றாலும் மற்ற சிலருடனும் மறைமுகமாக ரஜினி ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மீண்டும் தமது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்களும் நாளை காலை 8 மணிக்கு சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பறந்துள்ளது. இதனால் நாளைய ஆலோசனை கூட்டத்தில் கட்சி தொடங்குவது பற்றி விரிவாக விவாதித்து அதுபற்றிய அறிவிப்பையும் ரஜினி வெளியிடலாம் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நல்ல சுபமுகூர்த்த தினம் என்பது மட்டுமின்றி சங்கடஹர சதுர்த்தி நாளாகும். எனவே நாளைய ஆலோசனையின் முடிவில் கட்சிப் பெயர், கொடி பற்றிய அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் கட்சி தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பையாவது ரஜினி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




