பண்ருட்டியில் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்திற்கு வந்த உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். கடலூர் மாவட்டம் நடுவரப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவிக்கும், தாயாருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக பிரபுவின் மனைவி தனது மாமியார் மீது பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அவதூறாக பேசியதாகவும் பிரபுவிடம் அவரது மனைவி கூறியதாக தெரிகிறது.
எனவே இது தொடர்பாக உதவி ஆய்வாளர் பிரபு மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள காவல் ஆய்வாளர் வனஜாவிடம் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவின்பேரில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.