தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்..! புதுமுகத்திற்கு வாய்ப்பு வழங்கிய பாஜக மேலிடம்!!
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரபலங்கள் பலர் முட்டி மோதிய நிலையில் யார் இந்த முருகன் என்று அனைவரும் அவரின் பூர்வீகத்தை தேடும் வகையில் புதுமுகத்தை தலைவராக பாஜக மேலிடம் அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக திறம்பட பணியாற்றிய தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானத்தம், கோவை முருகானந்தம், குப்புராம், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் என தமிழக பாஜக பிரபலங்கள் பலரும் இந்தப் பதவிக்கு முட்டி மோதியதால், தலைவர் நியமனம் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.

இந்நிலையில் யாருமே எதிர்பாராத புதுமுகமாக எல்.முருகன் என்பவரை தமிழக பாஜக தலைவராக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.எல்.முருகன் பெயர் அறிவிக்கப்பட்ட உடனே யார் இந்த முருகன் ? என்று என்ற கேள்வி தமிழக பாஜக வட்டாரத்திலேயே எழுந்தது. அதை விட மீடியாக்களும் முருகனுடைய பூர்வீகம் என்ன? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தேடத் தொடங்கும் அளவுக்கு புதுமுகம் ஒருவரை தமிழக பாஜக தலைவராக அறிவித்து அக்கட்சி மேலிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.
நாமக்கல்லைச் சேர்ந்த எல்.முருகன் 43 வயது இளைஞராவார்.சட்ட மேற்படிப்பு படித்து விட்டு சென்னையில் வழக்கறிஞராக இருக்கும் எல்.முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். தம் மீது நம்பிக்கை வைத்து தமிழக பாஜக தலைவராக நியமித்துள்ள பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள எல்.முருகன், அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக சிறப்பாக கட்சிப் பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




