நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவும், திமுகவும் தலா 3 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் பெண்கள், சிறுபான்மையினர் யாரும் இடம் பெறவில்லை. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 புதிய எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 26-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பிரதான கட்சிகளான அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தலா 3 இடங்கள் கிடைப்பது உறுதி. இதனால் இரு கட்சிகளும் தலா 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
தற்போதுள்ள ராஜ்யசபா எம்.பி.க்களில் அதிமுகவில் 4 பேர், திமுகவில் ஒருவர், மார்க்சிஸ்ட் கட்சியில் ஒருவர் என 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைவதால் இந்த தேர்தல் நடைபெறுகிறது. திமுகவில் பதவிக்காலம் முடிவடையும் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற இருவரில் ஒருவர் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மற்றொருவர் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆவர். இவர்கள் இருவரும் டெல்லிக்கு முதல் முறையாக காலடி வைக்கின்றனர். இதில் திருச்சி சிவா டெல்டா மாவட்டத்தில் திருச்சி மாவட்டத்தையும், அந்தியூர் செல்வராஜ் கொங்கு மண்டலத்தில் ஈரோட்டையும், என்.ஆர்.இளங்கோ சென்னையையும் சேர்ந்தவர்கள். பெண்கள், சிறுபான்மையினர், தென் மாவட்டங்களில் யாரும் இல்லை.
அதிமுகவில் 4 எம்.பி. இடங்கள் காலியாகின்றன. இதில் விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா என தென்மாவட்டங்களைச் சேர்ந்த 2 பெண்களும் அடங்குவர். தற்போது 3 பேர் தான் ஜெயிக்க முடியும் என்பதால், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோருக்கும் கூட்டணியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மு.தம்பிதுரை, கே.பி. முனுசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே மக்களவை எம்.பி.க்களாக இருந்த அனுபவம் வாய்ந்தவர்கள். ஜி.கே.வாசனும் 2 முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.
ஆனால் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும், ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். திமுக போன்றே அதிமுகவிலும் ஒரு பெண் வேட்பாளருமில்லை. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தென் மாவட்டத்துக்கும் பிரதிநிதித்துவமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ராஜ்யசபா எம்பி பதவிக்கு பெண்கள், சிறுபான்மையினர், தமிழகத்தின் வட மாவட்டம், தென் மாவட்டம் ,டெல்டா கொங்கு மண்டலம் என பரவலாக இருக்கும் படி வேட்பாளர்களை அறிவிப்பது வழக்கம். இந்த முறை பிரதான கட்சிகள் இரண்டுமே இதனை கவனத்தில் கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.