--- --:--:-- --

“ஓசியில ஈசியா பேசினதெல்லாம் போச்சு!” செல்போன் கட்டணம் 10 மடங்கு வரை உயர்கிறது..?

sefsef

செல்போன் கட்டணங்கள் எட்டாத உயரத்துக்கு 10 மடங்கு வரை உயர்த்தப்படலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கிலி ஏற்படச் செய்துள்ளது.

 

இன்றைய அன்றாட வாழ்க்கையில் அனைவரின் கைகளில் தவழும் முக்கிய சாதனமாகி விட்டது செல்போன் . உலகமே கைக்குள் என்பது போல சுருக்கி விட்டது இந்த செல்போன் . அத்தியாவசிய தேவைகளில் செல்போனும் கட்டாயம் என்றாகிவிட்டது. காஸ் இணைப்பு முதல் வங்கி சேவை வரை என அனைத்துக்கும் நம் பெயரை கேட்கிறார்களோ இல்லையோ மொபைல் நம்பர் என்ன என கேட்கும் நிலையாகி விட்டது.

 

இதனால் கிராமத்து படிக்காத பாமரன் முதல் பெரும் மிகப் பெரும் கோடீஸ்வரன் வரை என அவரவர் வசதிக்கு ஏற்ப 200 ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள விதவிதமான செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 1990 களில் செல்போன் அறிமுகமானபோது, வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஏனெனில் வயர்லஸ் போன்று பெரிய சைஸ் சாதனத்தின் விலையே அப்போது 10 ஆயிரத்துக்கும் மேல்.கட்டணமோ நிமிடத்துக்கு ரூ.7 முதல் 10 வரை என நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததால் சாமான்யனுக்கு சாத்தியமில்லாமல் இருந்தது.

 

ஆனால் ஓரிரு வருடங்களில் ரிலையன்சின் திருபாய் அம்பானி, தொலைத் தொடர்பு துறைக்குள் காலடி வைக்க, வெறும் 500 ரூபாய்க்கு அலுமினியத்தாலான கையடக்க செல்போனை அறிமுகப்படுத்தினார். அது மட்டுமா? சிம் கார்டு இலவசம் … எவ்வளவு கால் வேண்டுமானாலும் ஓசியில் பேசலாம் என்ற நம்ப முடியாத சலுகை வேறு அள்ளி விட்டார்.

 

ஓசி, சலுகை என்றால் விடுவார்களா நம்ம ஆட்கள்? வரிசை கட்டி வாங்க ஆரம்பித்தனர். ஆனால் அம்பானி எப்படிப்பட்ட வியாபார வித்தகர் என்பது சீக்கிரமே தெரிந்து விட்டது. மக்களிடம் செல்போனை சலுகையில் விதைத்து விட்டு, நாடு முழுவதும் தொலைத் தொடர்பு வசதியை மக்களிடம் கொண்டு சென்றது தாம் தான் என்று மார்தட்டி, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை சலுகை பெற்று சரிக்கட்டினார்.

 

அது மட்டுமா? இந்த ஓசிச் சலுகை எல்லாம் இனி கிடையாது. பேசுனதுக்கு பில் கட்ட வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் பில் தொகையாக அனுப்பி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் விழி பிதுங்கி நின்ற வாடிக்கையாளர்களை, முடிந்தளவு பணம் கட்டி விட்டு சேவையை தொடரலாம் நைசாக சமாதானம் செய்து பின்னர் மாதாமாதம் இவ்வளவு என ஒரு தொகையை கட்டணமாக நிர்ணயம் செய்தது.

அடுத்து இந்தத் துறையில் ஏர்டெல், வோடவோன், ஐடியா, டாடா என பல நிறுவனங்களும் போட்டி போட்டு குதிக்க, சிம் கார்டு இலவசம், அன் லிமிடெட் கால் என்றெல்லாம் சலுகைகள் அறிவித்தன. இதனால் மீண்டும் கட்டணங்கள் மலிவாகின. ஆனால் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்த நிறுவனங்கள் தான் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகின.

 

மத்திய அரசாவது நஷ்டத்தை சரிக்கட்டுமா? என்று எதிர்பார்க்க, முடியாது என கைவிரித்தது.இதனால் டாடா, ஐடியா நிறுவனங்கள் இந்தத் துறையே வேண்டாம் என இழுத்து மூடிவிட்டு ஓடி விட்டன. இப்போது இருக்கும் நிறுவனங்களில் ஏர்டெல், வோடபோன் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவையும் தள்ளாடுகின்றன.

 

இவையும் நஷ்டத்தை சரிக்கட்ட சமீபத்தில் 50% வரை கட்டணங்களை உயர்த்தின. ஆனாலும் கட்டுப்படியாக வில்லையாம். இதனால் கட்டணங்களை தாங்களே நிர்ணயம் செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் முறையிட, சரியென நிதி ஆயோக் கூறியுள்ளதாம். இதனால் விரைவில் செல்போன் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை உயர்த்தப்பட உள்ளதாம். அப்படியெனில் செல்போனே கதி என எந்நேரமும் நெட்டில் நோண்டிக் கொண்டிருக்கும் பலரின் பாடு படு திண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon