மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது..? பிரதமர் மோடியுடன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா திடீர் சந்திப்பு!!
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. அதிருப்தியில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று திடீர் என பிரதமர் மோடியை சந்தித்தார். இதனால் அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது இதனால் ம.பி.யில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 3 முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாஜக நூலிழையில் தோல்வியை தழுவியது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 107 இடங்களிலும் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் சமாஜவாதி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வரானார்,
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க, தேர்தலின்போது ஜோதிராதித்ய சிந்தியாவை பொறுப்பாளராக நியமித்ததே காரணம் என் பார்க்கப்பட்டது. காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த ச ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவருக்கு மாநில காங்கிரஸ் பதவியை தலைவர் பதவியை வழங்குவதாக மேலிடம் உறுதி அளித்திருந்தது. ஆனால் அதனையும் கமல்நாத் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த சிந்தியா, திடீரென போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேருடன் கடந்த இரு நாட்களாக தலைமறைவானார் சிந்தியா . எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூருவில் சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள நிலையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது. சிந்தியாவை சமாதானம் செய்யும் முயற்சிகளில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. சமாதான முயற்சியாக, ம.பி.மாநில அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைத்து, சிந்தியாவின் ஆதரவாள்களுக்கு கூடுதலாக அமைச்சர் பதவி வழங்குவதாக கூறி காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்யப் பார்த்தது.
ஆனால் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இதற்கெல்லாம் மசியவில்லை என்றே தெரிகிறது. இந்த பரபரப்பில் தான் இன்று பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சிந்தியா திடீரென சந்தித்துள்ளார். இதன் மூலம் அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைவதும் உறுதி என்று கூறப்படுகிறது.
இப்படி ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜக இணையும் பட்சத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழச் செய்து பாஜக ஆட்சியமைத்தது. இதே போன்ற சூழல் இப்போது ம.பி.யில் உருவாகியுள்ளது. காங்கிரசின் 114 எம்எல்ஏக்களில் 17 பேர் ராஜினாமா செய்தால் காங்கிரசின் பலம் 97 ஆக குறையும். சட்டப்பேரவையின் பலமும் 211 ஆக குறையும். இதனால் ஆட்சியமைக்க 106 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் 107 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக, கர்நாடகா பாணியில் ஆட்சியமைப்பது உறுதி என்றே தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




