காதல் திருமணம்! கடத்தப்பட்ட மணமகள்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியரை தாக்கி மணமகள் கடத்தப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் சேர்ந்த செல்வன், இளமதி இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது காதல் வயப்பட்டனர் . இருவேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
திராவிடர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த செல்வன் அந்த இயக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரனின் உதவியோடு திங்களன்று குளத்தூர் அருகே உள்ள காவல் ஆண்டியூர் பெரியார் படிப்பகத்தில் இளமதியை திருமணம் செய்துகொண்டார்.

இரவு 9 மணி அளவில் 5க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த 40க்கும் அதிகமானோர் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். வழியெங்கும் ஈசுவரனை துன்புறுத்தி புதுமண தம்பதியின் இருப்பிடத்தை கேட்டுள்ளனர்.
அப்போது ஊக்கம் பருத்திக்காடு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் புதுமண தம்பதி சென்றதை பார்த்த இந்த கும்பல் புது மாப்பிள்ளையை தாக்கி விட்டு மணமகள் இளமதியை கடத்தி சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் இளமதியும், செல்வன் மற்றும் ஈஸ்வரனும் தனித்தனி காரில் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் கருங்கல்லூர் வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது பெண்ணின் தந்தை ஜெகநாதன் வேனில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மணமகன் செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரும் வைக்கப்பட்டிருந்த இடம் தெரியவந்தது.
இதனடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் மீட்டனர். கடத்தப்பட்ட புதுமண பெண்ணின் இளமதியை மீட்க வலியுறுத்தியும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நள்ளிரவு கொளத்தூர் காவல் நிலையத்தை திராவிட விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டனர். மேலும் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் காவல்நிலையத்தில் வலியுறுத்தப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




