மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள மீனாட்சி பட்டு கிராமத்தில் வைர முருகன், சௌமியா தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி குழந்தை உயிரிழந்ததாகக் கூறி வீட்டின் அருகே புதைக்கப்பட்டது. போலீசாரின் சந்தேகத்தின் பெயரில் உடலை தோண்டி எடுத்து விசாரணை செய்ததில் எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால் பெற்றோரை கைது செய்தனர்.
வறுமையில் வாடும் தங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் பெண் பிறந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெண் சிசு கொலை குறித்து முழு விசாரணைக்கு பிறகே உண்மைகள் தெரியவரும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை உசிலம்பட்டி அருகே பெண் சிசுக்கொலைகள் மீண்டும் வழங்கி வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பெண் குழந்தைகள் பிறந்தாலே பாவம் என்று நினைக்கும் அவலத்தை போக்கும் விதத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக கூறினார். பெண் சிசுக் கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.