தமிழகத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு 6 எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெறும் நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. திமுக சார்பில் 3 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பட்டியல் வெளியாவது எப்போது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவில் எம்பிக்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த 6 இடங்களுக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த 6 ராஜ்யசபா எம்.பி இடங்களில் அதிமுகவுக்கு மூன்றும், திமுகவுக்கு மூன்று இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டும் திமுக மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் காங்கிரஸார் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் திமுகவின் நிலைப்பாட்டில் கடைசி நேரத்தில் மாற்றம் இருக்கலாம் என்று கூட எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதிமுகவில் பலரும் சீட் கேட்டு மல்லுக்கட்டுவதால் வேட்பாளர்களை இறுதி செய்வதில் குழப்பம் நீடிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவும் ஒரு இடத்தை ஒதுக்க வேண்டுமென்று அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
அதேபோல் தமாக தலைவர் வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோரும் தங்களுக்கு ஒரு இடம் கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுக்குமா? என்பது சந்தேகமாக தான் உள்ளது .அனேகமாக நாளை மறுதினம் நல்ல நாளான மாசிமகம் நாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.