சென்னை ராயப்பேட்டையில் பிரமாண்ட கட்டிடத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு சொந்தமாக புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அப்போது அமமுக கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த அலுவலகம் இயங்கி வந்தது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சரை இசக்கி சுப்பையா, அமமுக கட்சியில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இதனால் அமமுக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்த இசக்கி சுப்பையாவின் கட்டடத்திலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே வெஸ்ட்காஸ்ட் சாலையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகில் புதிதாக பலமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வரும் 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. பிரம்மாண்ட கட்டிடத்தில் கட்சி தலைமை அலுவலகம் செயல்பட உள்ள நிலையில், திறப்பு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த விழாவில் பங்கேற்க கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வருமாறு டிடிவி தினகரன் அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.