கோவை காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர்,சி.ஏ.ஏ கொண்டு வரப்பட்டதற்கு பிரதமர், அமித்ஷா ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பில்லை எனவும், இஸ்லாமியர்களை திமுக, கம்யூனிஸ்ட், தி.க போன்ற அமைப்பினர் தூண்டி விடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும்,இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் கலவரத்தை தூண்ட முயல்வதாகவும்,சி.ஏ.ஏ வை ஆதரித்து இந்து முன்னணி ஜெபவேள்வி நடத்தி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும்,நேற்றிரவு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டு இருக்கின்றார். கலவரத்தை தூண்ட இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று கோவை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.மேலும்,காவல் துறை இஸ்லாமியர்களை பார்த்து பயப்படுவதாகவும்,காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை 6 முதல் மாலை 6 வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும்,நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் போராடுபவர்களை கைது செய்ய காவல் துறை முன் வருமா என தெரியவில்லை எனவும்,கோவையில் நடத்தப்படும் கடையடைப்பிற்கு வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,மற்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும்,கோவையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்டு வரும் சி.ஏ.ஏ ஆதரவு போராட்டம் நேற்றுடன் முடித்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் கோவையில் இந்து முன்னணி அமைப்பை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தபடுமென அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் நேற்றிரவு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்த் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.இதனை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமென அவ்வமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பை கண்டித்து நாளை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜ ஹீசைன் இந்து முன்னணி அமைப்பினர் தொடர்ந்து வன்முறை சம்பங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும்,கோவையில் கலவரத்தை ஏற்படுத்த இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் முயன்று வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இந்து முன்னணி பயங்கரவாதத்தை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், அவ்வமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.