மன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் காதல் மனைவியை கணவரே அடித்துக் கொன்று விட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரும் சத்யா என்ற பெண்ணும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் நீடாமங்கலத்தில் வசித்து வந்துள்ளனர். செங்குட்டுவன் தனது மனைவியை தாய் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வருமாறு அடிக்கடி அடித்து உதைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கப்பலுடையான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் யாரோ ஒருவர் செங்குட்டுவனின் காரை விட்டு விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காரை திறந்த கிராம மக்கள் உள்ளே சத்யா உயிர் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். சத்யாவின் கணவர் செங்குட்டுவன் அடித்துக் கொன்று விட்டதாக ஆத்திரமுற்று அவர்கள் காரை அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான செங்குட்டுவனை அவர்கள் தேடி வருகின்றனர். வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்த செங்குட்டுவன் சத்யாவை கொன்றுவிட்டதாக பெற்றோரும் கிராம மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.