8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வா? தப்பு.. தப்பா.. “சர்க்குலர்” விடும் கல்வித்துறை..! அமைச்சர் செங்கோட்டையன் பாடுதான் திண்டாட்டம்!!
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பதை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், கல்வித்துறை அதிகாரிகளோ ஏப்ரல் 2-ந்தேதி 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என ஒரு சுற்றறிக்கை அனுப்பி மீண்டும் ஒரு குளறுபடி செய்துள்ளனர். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் தவறுதலாக சர்க்குலர் வெளியாகி விட்டது என மீண்டும் ஒருமுறை விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. சமீப காலமாக தப்பும், தவறுமாகவும் குளறுபடியாகவும் உத்தரவுகளை பிறப்பிப்பதும், பின்னர் அதை துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது அவர் விளக்கமோ, மறுப்போ, தவறுதலாக வெளியாகி விட்டது என வருத்தமோ தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. துறையின் அமைச்சருக்கு தெரியாமலே இப்படி அதிகாரிகள் தன்னிச்சையாக நடந்து கொள்வது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால் பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் கூட சமீபத்தில் மாற்றப்பட்டார்.
இந்தாண்டு முதல் ஐந்து மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் கல்வித்துறை பிடிவாதமாக தீவிரம் காட்ட, அதற்கு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு எழ, கடைசியில் முதல்வரிடம் பேசி ரத்து செய்ய வைத்ததில் அமைச்சர் செங்கோட்டையனின் பங்கு முக்கியமானது. இதனால் மாணவர்களும், பெற்றோரும் நிம்மதி அடைந்தனர்.
ஆனாலும் கல்வித்துறை அதிகாரிகள் பொதுத் தேர்வு நடத்தும் ஞாபகத்திலேயே இன்னும் இருப்பார்கள் போலும். கடந்த 3-ந்தேதி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.

அந்த சுற்றறிக்கையில், ஏப்ரல் 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடக்க இருப்பதாகவும், அதற்கு தேர்வு மையங்களின் பட்டியலை தயார் செய்யும்படியும், ஒவ்வொரு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்களை நியமனம் செய்து அந்த பட்டியலை மார்ச் 13-ந் தேதிக்குள் சென்னைக்கு அனுப்பும்படியும் உத்தரவிடப்பட்டிருந்தது.
8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கிடையாது என அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்த நிலையில், இது என்னடா,தேர்வுத்துறை இயக்குநர் திடீர் உத்தரவு பிறப்பிக்கிறார் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பெரும் குழப்பம். பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் மீண்டும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
இந்த குளறுபடி குறித்து, திமுகவைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். மேலும் இந்த விவகாரம் அமைச்சர் செங்கோட்டையனின் கவனத்துக்கும் சென்றது.
அப்போதுதான் தேர்வுத்துறை அதிகாரிகள், எட்டாம் வகுப்பு “தனித்தேர்வு” என்பதற்கு பதிலாக “பொதுத் தேர்வு” என தவறுதலாக குறிப்பிட்டு குளறுபடி செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், தனித் தேர்வு என்பதற்கு பதில் பொதுத் தேர்வு என தவறுதலாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழப்பத்தை சரி செய்து இன்று புதிய சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும், 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை கூறியதாகவும் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் தேர்வுகள் துறை அதிகாரிகள் செய்யும் தொடர் குளறுபடிகளால் துறையின் அமைச்சர் செங்கோட்டையன் பாடுதான் படு திண்டாட்டமாக போயுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




