--- --:--:-- --

“களை கட்டியது ராகவேந்திரா மண்டபம்!” கட்சி அறிவிப்பு வெளியிடுவாரா ரஜினி..? மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!!

caeeebfd-0fb5-4919-8a32-ef735312b397

அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது மக்கள் மன்ற மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனால் கட்சி தொடங்குவது பற்றி இன்று அறிவிப்பு வெளியிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, கடந்த 25 ஆண்டு காலமாகவே அரசியலுக்கு வரப்போவது போல பாவ்லா காட்டி வந்தார். தமிழக பிரச்னைகள் குறித்து திடீர் திடீரென கருத்துக்களை கூறி பரபரப்பையும், சலசலப்பையும், சர்ச்சைகளையும் பற்ற வைப்பதில் ரஜினியை யாரும் மிஞ்ச முடியாது. திரையுலக பிரபலம் என்பதால் அவர் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது போல் பரபரப்பாகி விடுவது வாடிக்கைதான்.

 

இதனாலேயே ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாகவே நீடித்து வந்தது. அவ்வப்போது பாவ்லா காட்டி வந்த ரஜினியும் ஒரு வழியாக, அரசியலுக்கு வரப்போவது உறுதி என கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அறிவித்தே விட்டார். இதனால் தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவர்களாக பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ரஜினி நிரப்பப் போகிறார் என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது.

ஆனால், அரசியலுக்கு வரப்போகிறேன் என்ற அறிவிப்பு வெளியிட்ட ரஜினி கட்சி தொடங்காமல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றம் என பெயரை மாற்றி, மன்ற கொடியையும் அறிமுகப்படுத்தி, மாநிலம் முழுவதும் நிர்வாகிகளையும் நியமித்து விட்டு, கூடவே 2021 சட்டப்பேரவை தேர்தல் தான் தமது இலக்கு என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார்.

 

இப்படியே 3 ஆண்டுகள் கழிந்து விட்டது. 2021 தேர்தலுக்கும் இன்னும் ஓராண்டு தான் உள்ளது. இதனால் ரஜினி கட்சியை ஆரம்பிப்பது எப்போது? அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்போது? இல்லாவிட்டால் கட்சி தொடங்காமலே வழக்கம் போல போக்கு காட்டி விடுவாரா? என மீண்டும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.

 

ஆனால் இந்தாண்டு பிறந்தது முதலே, ரஜினி கட்சி தொடங்கும் பணியில் சுறுசுறுப்பாகி விட்டது போலவே, அவருடைய நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்தன. துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். அடுத்து குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கருத்து கூறினார். டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்தார்.

பின்னர் சிஏஏ தொடர்பாக, இஸ்லாமிய பிரமுகர்களை சந்தித்து கருத்துகளை கேட்டார். இப்படி அடுத்தடுத்து முக்கிய விவகாரங்களில் ரஜினி ஈடுபாடு காட்டி வருவதன் மூலம் கட்சி தொடங்க தயாராகி விட்டார் என்பதுபோல பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில்தான் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் முக் இய ஆலோசனை கூட்டத்தை ரஜினி கூட்டியுள்ளார். இதனால் சென்னை ராகவேந்திரா மண்டபத்தின் வெளியே ரசிகர்கள் திரண்டிருக்க உள்ளே நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் புதிய கட்சி தொடங்குவது பற்றிய முக்கிய முடிவை ரஜினியின் எடுப்பாரா? என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon