--- --:--:-- --

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..! அதிமுக பிரமுகர்கள் 2 பேர் கைது!!

kui8

சிவகாசியில் வார இதழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

பிரபல வார இதழ் ஒன்றின் விருதுநகர் மாவட்ட செய்தியாளராக இருப்பவர் கார்த்திக் . இரு நாட்களுக்கு முன் அந்த வார இதழில் வெளியான செய்தியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., ராஜ வர்மனுக்கும் இடையே நிலவும் உட்பூசல் குறித்து செய்தி வெளியாகியிருந்தது.

 

இந்நிலையில், இந்த செய்தி வெளியான நேற்று முன்தினம் இரவு, சிவகாசி திருத்தங்கல் சாலையில் உள்ள ஒரு கடை முன் நின்றிருந்த கார்த்திக்கை மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர் . இதில் தலை, கை என பல இடங்களில் பலத்த காயம்பட்ட செய்தியாளர் கார்த்திக் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

செய்தியாளர் கார்த்திக் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் கார்த்திக் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முருகன், செல்லப்பாண்டி ஆகிய 2 பேரை சிவகாசி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon