எம்எல்ஏக்கள் மரணம்.. தகுதி நீக்கம்…, ராஜினாமா…! அதிக இடைத் தேர்தலை சந்தித்த 15-வது சட்டப் பேரவை!!
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் நடப்பு சட்டப்பேரவை தான் அதிக எண்ணிக்கையிலான இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி என முன்னாள் முதல்வர்களும் காலமாகி அவர்கள் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது முதல் எந்தந்த தொகுதிகளில் என்ன காரணங்களுக்காக இடைத்தேர்தல் நடத்தப்பட்டது என்பதை காண்போம்:
தமிழகத்தில் 15-வது சட்டப் பேரவைத் தேர்தல் 2016-ம் ஆண்டு மே மாதம் 16-ல் நடைபெற்றது. அதிமுக 134 இடங்களில் வென்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தது. திமுக 89 இடங்களில் வென்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
இந்தத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எம்.சீனிவேல், எம்எல்ஏவாக பதவியேற்கும் முன்னரே காலமான சோகம் நடந்தது. இதனால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதியில் 2016 அக்டோபரில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
அடுத்து 2016 டிசம்பரில், முதல்வர் ஜெயலலிதா மரணத்தால் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இந்தத் தொகுதியில் நடந்த இடைத்தோ்தலில் சுயேட்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 10 மாதங்களில் ஏ.கே. போஸ், 2018 ஆகஸ்ட் 2 -ல் காலமானார். இதனால் அங்கு மீண்டும் ஒரு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல். அதே ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமாக திருவாரூர் தொகுதியும் காலியானது. அடுத்த சில மாதங்களில் சூலூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜும் மறைய காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 3 ஆனது.
இந்த வேளையில் அதிமுகவில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் 21 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது.
அடுத்து விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் எம்.பி.யானதால், அத்தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த 2 தொகுதிகளுக்கு கடைசியாக இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் தான் திருவொற்றியூா் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமியும், குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏவான காத்தவராயனும் அடுத்தடுத்த நாட்களில் மரணமடைய இந்த இரு தொகுதிகளும் காலியாகியுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் இந்த 15-வது சட்டப்பேரவை காலத்தில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் 27 ஆகி தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே அதிக இடைத்தேர்தல் நடத்தப்பட்ட ஒரு மோசமான சாதனையாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




