டெல்லி வன்முறை: அதிரடி காட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதருக்கு பரிசு இதுதான்! நள்ளிரவில் டிரான்ஸ்பர் செய்தது மத்திய அரசு!!
டெல்லி வன்முறை தொடர்பாக நேற்று முழுவதும் அதிரடி உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்து டெல்லி காவல்துறை, மத்திய அரசின் வழக்கறிஞர்களை அலறவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை, நேற்று நள்ளிரவே பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்திற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளது மத்திய அரசு.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் முரளிதர்.கடந்த 2006 முதல் இங்கு மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் முரளிதர், பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கி கவனத்தை ஈர்த்தவர்.இப்படித்தான்டெல்லியில் நடைபெற்று வரும் கலவர சம்பவங்கள் தொடர்பாக நேற்று ரொம்பவே பிஸியாக வழக்கு விசாரணை நடத்தினார்.
நேற்று காலை, பிற்பகல், மாலை, இரவு என இவரது விசாரணை தொடர்ந்தது. டெல்லி கலவரத்தை வேடிக்கை பார்த்தது ஏன்? என காவல்துறையை விளாசினார். எப்போது வழக்குப்பதிவீர்கள்? கலவரத்தை கட்டுப்படுத்தாமல் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? என்றெல்லாம் காவல்துறை உயர் அதிகாரிகளை கேள்விகளால் விளாசியதுடன் பல்வேறு உத்தரவுகளையும் அடுத்தடுத்து பிறப்பித்தார்.
அது மட்டுமின்றி வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் பேசி, டெல்லி வன்முறைக்கு வித்திட்டதாகக் கூறப்படும் பாஜகவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றோர் மீது வழக்குப் போடாதது ஏன்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை உண்டு, இல்லை என ஆக்கினார்.
நீதிமன்ற அறையிலேயே பாஜக தலைவர்களின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை பெரிய திரையில் போட்டுக் காட்டி, இதெல்லாம் பார்த்தீர்களா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவீர்களா? என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் கடுமை காட்டினார் நீதிபதி முரளிதர்.

இது மட்டுமின்றி, நேற்றிரவு தனது வீட்டில் வைத்தும் விசாரணை நடத்திய நீதிபதி முரளிதர், டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை உரிய மரியாதையுடன் எரியூட்டத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
அத்துடன் டெல்லி வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு உதவ சிறப்பு வழக்கறிஞரை நீயமிக்கப் போவதாகக் கூறி மத்திய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இப்படி , டெல்லி வன்முறை தொடர்பாக நேற்று முழுவதுமே அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரின் செயல்பாடுகள், தேசிய அளவில் மீடியாக்களின் தலைப்புச் செய்தியாகி சபாஷ் போட வைத்தது.
ஆனால், மத்திய அரசு என்ன நினைத்ததோ? நேற்று நள்ளிரவே பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி முரளிதரை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து விட்டது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவு இப்போது பரபரப்பையும் கூடவே சர்ச்சையையும் ஏற்படுத்திவிட்டது எனலாம்.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி மூத்த நீதிபதியாக உள்ள முரளிதரை, ஏற்கனவே மாற்றம் செய்வது தொடர்பான முடிவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் கடந்த 12-ந் தேதியே அனுமதி வழங்கியிருந்தது. இதுபற்றிய செய்தி வெளியானவுடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 20-ந் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஒருவரை வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் நடைமுறை இதுவரை இல்லாதது. அப்படி மாற்றம் செய்வதானால் அவரை தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கிய பின் தான் மாற்றுவது வழக்கம் என்பதை சுட்டிக்காட்டி வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தால், டெல்லி உயர் நீதிமன்றத்திலேயே நீதிபதி முரளிதர் பணியை தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் பிறப்பித்த அதிரடி உத்தரவுகளுக்கு பரிசாக மத்திய அரசு அவரை நள்ளிரவில் அவசரமாக மாற்றியுள்ளது என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்து பரபரப்பாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




