சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
58 வயதாகும் கே.பி.பி. சாமி சென்னை திருவொற்றியூரை அடுத்த கேவி குப்பத்தை சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.பி.பி. சாமி, திருவொற்றியூர் தொகுதியிலிருந்து 2006-ல் முதன் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போதைய திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை மீன்வளத்துறை அமைச்சராகவும் இருந்தவர். 2011-ல் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், 2016 தேர்தலில் இதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.
திமுக மாநில மீனவர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த கே.பி.பி. சாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கேவிக் கே.வி குப்பத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. கே.பி.பி. சாமியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.