தலைநகர் டெல்லியில் 3-வது நாளாக வன்முறை தொடர்கிறது . பல இடங்களிலும் போராட்டம் பரவி தீவைப்பு, கல்வீச்சு சம்பவங்கள் தொடர்வதால் பதற்றம் நீடிக்கிறது. இதனால் வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வட கிழக்கு டெல்லியின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. இதனால் கடந்த 3 நாட்களாகவே கல்வீச்சு சம்பவங்களால் மோதல் வெடித்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் முதல் டெல்லியின் பல பகுதிகளிலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் துப்பாக்கிச்சூடு, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவில்லை. போராட்டம் மேலும் பரவி வருகிறது. தீ வைப்பு சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதனால் பல இடங்களில் பற்றி எரிகிறது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்த வன்முறைச் சம்பவங்களில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளார். வன்முறை தீவைப்பு சம்பவம் காரணமாக வட கிழக்கு டெல்லியில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையைச் சேர்ந்த 67 கம்பெனி வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மாலைஜப்ராபாத் ஏரியாவில் மீண்டும் வன்முறை வெடித்தது. தீ வைப்பு , கல்வீச்சு தாக்குதல்கள் மீண்டும் நடைபெற்று வன்முறைக் களமாக மாறியது.
இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றும் கட்டுப்படுத்த முடியாத முடியவில்லை. இதையடுத்து வட கிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் பதற்றம் நீடிக்கிறது.