தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி., இடங்களுக்கு மார்ச் 26-ல் தேர்தல்..! திமுக, அதிமுகவில் யோகம் யாருக்கு..?

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக் களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்த இடங்களுக்கு மார்ச் 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா அதிமுகவைச் சேர்ந்த முத்துகருப்பன் ஏ கே செல்வராஜ், சசிகலா புஷ்பா (இப்போது பாஜக), விஜிலா சத்தியானந்த், மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் இந்த இடங்களுக்கு வரும் மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

தற்போதைய நிலையில், சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அதிமுகவும் திமுகவும் தலா மூன்று இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது. திமுகவில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு இடங்களுக்கு திமுக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் ஒரு இடத்தை விட்டுக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

அதிமுக சார்பில் எம்.பி.யாக இருந்த சசிகலா புஷ்பா இப்போது பாஜகவுக்கு தாவிவிட்டார். பதவி முடிவடையும் மற்ற 3 பேரில் விஜிலா சத்தியானந்த்துக்கு மீண்டும் எம்.பி.யோகம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இரு இடங்களுக்கு யார் என்பதில் கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது. இந்நிலையில் தேமுதிக தரப்பில் தங்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி சேர வேண்டுமெனில், ராஜ்யசபா சீட்டை முன்கூட்டியே தர வேண்டும் என தேமுதிக தரப்பில் வீம்பு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் எம்.பி.யாகும் கனவில் உள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


Leave a Reply