இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் முப்படை அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு நேற்று அகமதாபாத் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப் பை வரவேற்ற பிரதமர் மோடி, பின்னர் இருவரும் 22 கிலோமீட்டர் தூரத்துக்கு காரில் பேரணியாகச் சென்றனர். வழியில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். பின்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே டிரம்ப் கலந்துரையாடல் நடத்தினார்.
தொடர்ந்து, ஆக்ரா சென்ற ட்ரம்ப் தனது மனைவி, மகள், மருமகனுடன் உலக அதிசயமான தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தார். பின்னர் நேற்று இரவே டெல்லி வந்து தங்கினார்.
இன்று காலை டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய அரசு சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப் தம்பதியினரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் அவருடைய மனைவியும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சிறிது நேரம் பேசிய பின் ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு தாம்ப் சென்றார்.
காந்தியின் சமாதியில் மலர் வளையம் வைத்து டிரம்ப் தம்பதியினர் அஞ்சலி செலுத்தினர். மேலும் காந்தி சமாதியில் மலர் தூவி சிறிது நேரம் மௌனமாக நின்று இருவரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பேச்சுவார்த்தை பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், ராணுவம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.