திருச்சி தம்பதி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 கல்லூரி மாணவர்கள் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 மாதங்கள் கழித்து இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரகம்பி எனும் இடத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டனர்.
பயங்கர ஆயுதங்களால் இருவரையும் தாக்கி 10 சவரன் நகை மற்றும் ரமேஷின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் பழனிசாமி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது.

இது குறித்து விசாரணை நடத்திய போது விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் கொலை செய்யப்பட்ட ரமேஷ்க்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் பழனிச்சாமியும் அவரது நண்பர் சத்திரமணியும் இணைந்து ரமேஷ் தம்பதியை கொலை செய்துவிட்டு நகை மற்றும் இருசக்கர வாகனத்தை கொள்ளை அடித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் அவர்கள் மீது மற்றொரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




