இந்தியாவுக்காக எனது நண்பர் மோடி இரவு பகலாக உழைக்கிறார் என அகமதாபாத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.
இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் மைதானத்தில், லட்சக்கணக்கானோர் திரண்டிருந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்காக மொதேரா மைதானம் வந்தடைந்த ட்ரம்ப், மெலானியா ட்ரம்பை மத்திய அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சர்யா தேவ்ரட் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்று பேசுகையில், சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது.
களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் . உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கிறேன் என்றார். இந்தியா – அமெரிக்கா உறவு மற்ற நாடுகளுக்கு இடையிலான உறவு போன்றதல்ல என்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மகளை மனதார வரவேற்கிறேன். அமெரிக்க அதிபரின் இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கது என மோடி புகழாரம் சூட்டினார்.
இதன் பின் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். அதில் சில துளிகளை காணலாம்:
இந்தியர்களின் ஒற்றுமை உலக நாடுகளுக்கு ஒரு உதாரணம்.இந்தியாவிற்கு வந்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். இந்தியாவிற்காக எனது நண்பர் மோடி இரவு பகல் பாராமல் உழைக்கிறார்.
ஜனநாயகத்தின் ஒரு அற்புதம் இந்தியா.தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளார். அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி.
விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர். கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடிக்கு நன்றி.
இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு.மக்கள் நலனை முன்னிறுத்துபவர்கள் வலுவான தலைவராகின்றனர். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு நடத்தும் நாடு இந்தியா.
இந்தியாவின் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி, உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரனம் -அதிபர் ட்ரம்ப் என டிரம்ப் புகழ்ந்தார்.