இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அரசு சார்பில் விருந்தளித்து உபசரிக்கிறார். இதில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன் மனைவி, மகள் மற்றும் உயர் அதிகாரிகள் என பெரும் படையினர் இந்தியா வருகின்றனர். டிரம்ப்பின் இந்த இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது – நாளை நண்பகல் குஜராத் தலைநகர் அகமதாபாத் வரும் டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் காரில் 22 கி.மீ. தூரத்துக்கு பயணிக்கும் டிரம்ப், மகாத்மா காந்தியின் ஆசிரமத்தை விசிட் செய்வதுடன், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு நமஸ்தே டிரம்ப் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பின்னர் நாளை மாலை மனைவி, மகளுடன் ஆக்ரா செல்லும் டிரம்ப், உலக அதிசயமாம் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்து விட்டு இரவில் டெல்லி திரும்புகிறார்.
நாளை மறுநாள் காலை குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய அரசு சார்பில் டிரம்ப்புக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படுகிறது. முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பளித்து டிரம்பை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்கிறார். பின்னர் அன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப்புக்கு தடபுடல் விருந்து கொடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உபசரிக்கிறார். இந்த விருந்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த விருந்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இந்த விருந்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.