உ.பி., சுரங்கத்தில் 3500 டன் தங்கம் இருப்பதாக கிளப்பி விட்டது புரளியாம்..? மொத்தமே 160 கிலோ தான் தேறுமாம்!!
உ.பி., மாநிலத்தில் இரு இடங்களில் பூமிக்கடியில் 3500 டன் அளவுக்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வெறும் புரளியாகி விட்டது. 20 வருடங்களுக்கு முன் அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் வெறும் 160 கிலோ கிடைத்தாலே அரிது என கண்டறியப்பட்டதாக இந்திய புவியியல் துறை தெரிவித்துள்ளது.
உ.பி.மாநிலத்தின் சோன் பத்ரா மாவட்டத்தில் இரு இடங்களில் பெரிய பெரிய தங்கப்புதையல் புதையுண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பு செய்தியானது. தங்கப் படிவங்கள் மூலம் ஒரு சுரங்கத்தில் 2943 டன் தங்கமும், மற்றொரு சுரங்கத்தில் 646 டன் தங்கமும் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், சுரங்கம் தோண்ட தனியாருக்கு இ-டெண்டர் விடப்பட்டு விட்டதாகவும் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. இதனை உ.பி.மாநில புவியியல் துறை உயர் அதிகாரி ஒருவர் புள்ளி விபரங்களுடன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இப்படி 3500 டன் தங்கம் கிடைப்பதால், உலக அளவில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். தற்போது இந்தியாவின் கைவசம் இருப்பு இருப்பதோ 600 டன் தங்கம் . இதைப் போல் 6 மடங்கு அதிகரித்து 3500 டன் தங்கம் கிடைத்தால் தங்கத்தை இருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடம் இந்தியாவுக்கு கிடைக்கப் போகிறது என பெருமையாக, பக்கம் பக்கமாக செய்திகள் வெளியாகி பரபரத்தது.
ஆனால் அப்படியெல்லாம் ஆயிரக்கணக்கான டன் தங்கம் இந்தியாவில் கிடைக்கப் போவதில்லை. இப்படி வெளியான செய்தி வெறும் வதந்தி தான் என இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் டைரக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். உ.பி.யில் குறிப்பிட்ட அந்த இரு பகுதிகளில் தங்கம் உள்ளதா? என 20 ஆண்டுகளுக்கு முன் பரிசோதித்தது உண்மை தான் என்றும், ஆய்வில் பல்வேறு கனிமங்களுடன் தங்கப் படிவங்களும் சிறிதளவு காணப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சுரங்கம் தோண்டி 50 ஆயிரம் டன்னுக்கும் மேலான கனிமங்களை பிரித்தெடுக்கும் போது வெறுமனே I60 கிலோ மட்டுமே தங்கம் தேறும் என்பது தெரிய வந்தது. இதனால் தங்கச் சுரங்கம் தோண்டும் பணி எதுவும் தொடங்கும் முடிவு எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி, 3500 டன் (அதாவது 35 லட்சம் கிலோ) தங்கம் கிடைக்கப் போகிறது என நப்பாசையில் வெளியான செய்திகளுக்கு இந்திய புவியியல் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




