பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி..! ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் வழங்கினார்!!
ராமநாதபுரம் மாவட்டம் 2,880 மாணவ, மாணவியருக்கு ரூ.1.13 கோடி மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ஆகியோர் முதற்கட்டமாக 18 பள்ளிகளைச் சார்ந்த 2,880 மாணவ மாணவியருக்கு ரூ. 1.13 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.

விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2011-12 முதல் 2018-19 வரை 1,45,813 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 11,846 மாணவ, மாணவியருக்கு ரூ.4.67 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18 பள்ளிகளைச் சேர்ந்த 2,880 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.
ராமநாதபுரத்தில் 1,689 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.66.78 லட்சம் மதிப்பிலும், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 729 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.28.83 லட்சம் மதிப்பிலும், கீழக்கரையில் 462
மாணவ, மாணவியர்களுக்கு ரூ.18.25 லட்சம் மதிப்பிலும் 18 பள்ளிகளைச் சார்ந்த 2,880 மாணாக்கர்களுக்கு ரூ.1.13 கோடி மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்டக் கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி, தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




