அதிமுக யார் கையிலும் இல்லை..! மக்கள் கைகளில் தான் உள்ளது..! பாஜக மேலிடப் பார்வையாளருக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில்!!

பிரதமர் மோடியின் கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்தால் என்ன தப்பு? என பாஜக மேலிடப் பார்வையாளர் முரளிதர்ராவ் கூறியதற்கு, அதிமுக யார் கைப் பிடியிலும் இல்லை; மக்கள் கையில் மட்டுமே உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் கொடுத்துள்ளார்.

 

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மத்தியில் ஆளும் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது எனவும், பிரதமர் மோடியின் கைகளில் சிக்கி முதல்வர் எடப்பாடியை ஆட்டுவிப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டு களை சுமத்தி வருகிறார்.மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர்ரால் பதிலளிக்கையில், பிரதமர் மோடியின் கையில் முதல்வர் எடப்பாடி இருப்பதில் என்ன தவறு? என்று தெரிவித்திருந்தார். இது, ஆமாம் பாஜக தான் தமிழக அரசை ஆட்டுவிக்கிறது என்பது போல இருந்தது.

 

முரளிதர் ராவின் இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பது போல் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.மதுரையில் இன்று செய்தியாளர்கள், முரளிதர்ராவ் கூறியது குறித்து கேட்டதற்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளிக்கையில், அதிமுக யாருடைய கைப்பிடியிலும் இல்லை; மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்றார்.

 

அத்துடன் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு புதிய திட்டங்கள், நன்மைகள் கிடைக்கும். இதைத் தான் மு.க.ஸ்டாலின் பொறுக்க முடியாமல் எங்களை விமர்சிக்கிறார். அதிமுக அரசுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவதையே மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டு செயல்படுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


Leave a Reply