ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு பா.ரஞ்சித் எதிர்ப்பு
பெரியார் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் பெரியாரையும் மறந்துவிட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார். பட்டியலின மக்கள் நீதிபதிகள் ஆனது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அண்மையில் கூறியது சர்ச்சையானது.
இதனை கண்டிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் பா ரஞ்சித் அயோத்திதாசர் தொடங்கிய திராவிட தமிழ் உணர்வின் தொடர்ச்சியில் பெரியாரும் சாதி எதிர்ப்பை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் பெரியாரையும் மறந்து மறுத்துவிட்டார்கள் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துவதாக பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர், அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் தொடங்கி எத்தனையோ பெயர் தெரியாத போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை போராட்ட வரலாறை மறைத்து பிச்சையில் சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள் என்று ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




