கிவ் கோல்ட்..கிவ் கரன்சி என அரைகுறை இங்கிலீஷில் பேசி அமெரிக்கரை தாக்கிய கொள்ளையர்கள்!
சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் பணியாற்றி வருபவர் கேரி ஸ்டூவர்ட். அவரும், அவரது பெண் தோழியும் வீட்டில் இருந்தபோது அதிகாலை நேரத்தில் சிலர் கதவை தட்டி உள்ளனர். கதவைத் திறந்த அவரை 4 பேர் கொண்ட கும்பல் மடக்கிப்பிடித்து கட்டிப்போட்டு உள்ளது.
இதை கண்ட கேரியின் தோழி அறையைத் தாழிட்டு உள்ளே இருந்தவாரே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதை கவனிக்காத அந்த கும்பல் வீட்டில் பணம் கிடைக்குமா என தேடி உள்ளது. மேலும் கிவ் கோல்டு. கிவ் கரன்சி என தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவரை மிரட்டியுள்ளனர். ஆனால் அது புரியாமல் கேரி முழித்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் இருந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள் அவரது இன்னோவா காரையும் வீட்டில் இருந்த வெளிநாட்டு துணிகளையும் திருடிச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் துணிகளை காரில் அடுக்கிக் கொண்டிருந்த போது சரியாக போலீசார் அங்கு வந்துள்ளனர். இதை எதிர்பார்க்காத கொள்ளையர்கள் உடனடியாக வீட்டின் பின்புற வாசல் வழியாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய போலீசார் தப்பிச் சென்றவர்களை தேடிவருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




