ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆயிரம் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் அரசு ரப்பர் கழகம் இயங்கி வருகிறது.
இங்கு நான்கு கூட்டங்களுக்கு உட்பட்ட 9 பிரிவுகளில் 3,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் ஓட்டுதல் மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அரசு அதிகாரிகளுடனும் மற்றும் அமைச்சர்களுடனும் 48 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர்கள் தரப்பில் 100 ரூபாய் கூடுதலாக ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் 23 ரூபாய் இடைக்கால ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டது.
சட்டசபையில் இது குறித்து பேசிய பின்னர் கூடுதல் ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று அரசு அறிவித்ததால் அப்போது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த படி ஊதிய உயர்வு அறிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து கடைசி கட்டமாக அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து கீரிப்பாறை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள 9 பிரிவுகளின் கீழ் பணிபுரியும் 3 ஆயிரம் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.தொழிலாளர்கள் வராததால் ரப்பர் தோட்டம் வெறிச்சோடின.