அவிநாசி அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் மேற்பார்வையில் அவிநாசி அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்க கொண்டு வந்திருக்கும் இந்த கருப்பு சட்டத்தை இந்தியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்து அவிநாசி, மங்கலம் ரோடு, மஸ்ஜிதே நூர் யக்கீன் வல்ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு அவிநாசி அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட சென்னை, மண்ணடி பள்ளிவாசல் ஹஜ்ரத் அப்துல் காதிர், அவிநாசி மஸ்ஜிதே நூர் யக்கீன் வல்ஜமாஅத் பள்ளிவாசல் ஹஜ்ரத் மன்சூர் அலி இம்தாதி, திருமுருகன்பூண்டி பள்ளிவாசல் ஹஜ்ரத் அப்துல் வஹாப், தேவராயம்பாளையம் பள்ளிவாசல் ஹஜ்ரத் ஜாபர் சாதிக், சேவூர் பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினர் வக்கீல் ஆலம், தேவராயம்பாளையம் பள்ளிவாசல் செயலாளர் லியாகத் அலி, அவிநாசி பள்ளிவாசல் செயலாளர் சித்திக் உள்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இந்திய விடுதலை போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு, அவர்கள் செய்த தியாகங்கள் குறித்தும் இந்த சட்டத்தினால் இந்திய மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.

பின்னர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அவிநாசி, சேவூர், தேவராயன்பாளையம், திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைபிரிவு தலைவர் சதாம் ஹுசைன் நன்றி கூறினார். அவிநாசி போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Leave a Reply