இறந்த மகளை மீண்டும் கொண்டு வந்த தொழில்நுட்பம்!

மர்ம நோயால் உயிரிழந்த மகளை தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் தாய் சந்தித்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த காட்சி சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி அனைவரது அன்பையும் பெற்று வருகிறது. இதன் பின்னணி என்னவென்றால் தென்கொரியாவை சேர்ந்த ஜாங்கஸி ஜங் என்பவர் தனது ஏழு வயது பெண் குழந்தையான நோயோனை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இழந்துள்ளார்.

 

மர்ம நோய் காரணமாக உயிரிழந்ததால் அந்த குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தது. இதை அறிந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று உயிரிழந்த குழந்தையை விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உருவாக்க முடிவு செய்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி என்றால் கற்பனையாகவோ அல்லது நமக்கு விருப்பமான ஒரு உலகத்தை உருவாக்கி அதில் தமக்கு தேவையானவற்றை வடிவமைத்து அந்த மாய உலகத்தில் பயணிப்பது.

 

சுருக்கமாக சொன்னால் ரியாலிட்டி மூலம் செயற்கையாக ஒரு உலகையே படைக்கலாம். உயிரிழந்த நபரின் புகைப்படத்தை கொண்டு விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அந்த சிறுமியை தொலைக்காட்சி நிறுவனம் வடிவமைத்தது. சிறுமியின் தாயை வரவழைத்த தொலைக்காட்சி நிறுவனம் விர்சுவல் உலகிற்குள் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கண்ணாடி மற்றும் கையுறைகள் அணிவித்து வெர்ச்சுவல் உலகிற்குள் அனுப்பியது.

அங்கு உயிரிழந்த தனது ஆசை மகளை சந்தித்த தாய் ஆனந்த கண்ணீரில் நனைந்தார். ஆசையாக ஓடிவந்த மகளை கட்டி அணைக்க முயன்ற தாயிடம் அம்மா நீங்கள் என்னை தேடுகிறீர்களா என குழந்தை கேட்டதும் கண்ணீரை அடக்க முடியாத தாய் கதறி அழுதார். தொடர்ந்து குடும்பத்தை பற்றி விசாரித்த குட்டிப்பெண் தந்தையை சிகரெட் பிடிக்க அனுமதிக்க வேண்டாமென தாயிடம் கேட்டுக்கொண்டார்.

 

சகோதரனும், சகோதரியும் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்களா என்று பாசத்தோடு விசாரித்ததை பார்த்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தனர். சிலநிமிடங்கள் தாயிடம் விளையாடிய குழந்தை போய் வருகிறேன் எனக் கூறிவிட்டு விடை பெற்றுக்கொண்டார்.

 

இந்தப் பிறவியில் கிடைக்காதது அடுத்த பிறவியில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் உயிரிழந்த தனது செல்ல மகளை இந்த பிறவியிலேயே மீண்டும் சந்தித்த தாய் பலரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


Leave a Reply