ஆரணி அருகே அரசு மருத்துவ முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 5மாத குழந்தை திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சிரஞ்சீவிக்கு தமிழரசி என்ற மனைவியும், லித்தே என்று 5 மாத கைக் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் குழந்தை லித்தேவிற்கு புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற அரசு மருத்துவ முகாமில் தடுப்பூசியை செவிலியர்கள் போட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டிற்கு தமிழரசி சென்ற நிலையில், குழந்தை சோர்வாக காணப்பட்டதால் வேதனை அடைந்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் குழந்தை லித்தே திடீரென்று இறந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஆரணி கிராம காவல் நிலைய போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் ஆலோசனையை கேட்காமல் ஊசி போட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.