டிக் டாக் செயலியில் பகிரப்படும் பல வீடியோக்கள் நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தாலும் சில வீடியோக்கள் ஆபாசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருக்கிறது. அந்தவகையில் அபாயகரமான வீடியோவை இளைஞர்கள் இருவர் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிக்கு அதாவது சினிமா வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு ஏற்ப நமது உடல் அசைவுகள் மூலம் வீடியோ காட்சிகளாக மாற்ற உதவும் மென்பொருள் தான் டிக்டாக் செயலி. சிறிய அளவிலான வீடியோக்களை பகிர்வதற்காக அறிமுகமான இந்த செயலிக்கு இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகளவில் அடிமையாகவே மாறிவிட்டனர்.
இந்த வீடியோக்களுக்கு குவியும் பாராட்டுகளும் அவர்களுக்கு ஒருவித போதையை ஏற்படுத்தி விடுகிறது. பிறரை தவறாக சித்தரிப்பது, சினிமா வசனங்களை கொண்டு மற்றவர்களுக்கு மிரட்டல் விடுப்பது, தவறான உறவுகள் என்று இந்த டிக் டாக் செயலியால் தினுசு தினுசான கூத்துகள் அரங்கேறி வருகின்றன.
ஆபத்தான இடங்களில் நின்று வீடியோ எடுப்பதால் நிகழும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் தற்கொலைகள் என்று நீளுகின்றன டிக்டாக் பரிதாபங்கள். இப்படித்தான் தங்கள் வீடியோக்களுக்கு லைக்குகள் கிடைக்காதா என்ற விரக்தியில் இருந்துள்ளனர் இரண்டு இளைஞர்கள்.
வித்தியாசமாக எதையாவது செய்து லைக்குகளை குவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர்கள் வெளியிட்ட வீடியோ பொது மக்களிடையே அதிர்ச்சியையும், முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை பகுதியை சேர்ந்த இளைஞர்களான பிரசாத் மற்றும் பிரதீப் ஆகியோர் அப்பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் பாடல், வசனம் என தொடர்ச்சியாக டிக்டாக் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால் தங்கள் வீடியோக்களுக்கு அதிக லைக்குகள் வராத காரணத்தால் இருவரும் சோர்ந்து போகின்றனர். வித்தியாசமாக எதையாவது செய்து லைக்குகளை அல்ல வேண்டும் என்று மூளையைக் கசக்கி யோசித்தால் இந்த புதிய வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது கோவில் கருவறையில் உள்ள அம்மன் விக்கிரகம் மற்றும் விநாயகர் சிலை முன் நின்று காதல் பாடல்களுக்கு டிக் டாக் செய்து அதனை வெளியிட்டுள்ளனர். மேலும் கதாநாயகியை குறிப்பிட்டு வரும் பாடல் வரிகளுக்கு அம்மனை நோக்கி கைநீட்டி பாடும் இவர்களது வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடவுள் சிலைகளை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முகச்சுளிப்பு ஏற்படுத்தியுள்ள இத்தகைய செயலில் ஈடுபட்ட இந்த இளைஞர்கள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என்று கருத்துகள் வலுத்து வருகின்றன.