வருமான வரித்துறை சம்மன்…! ஏராளமான கேள்விகளுடன் காத்திருக்கும் அதிகாரிகள்…! விஜய் ஆஜராவாரா?
மூன்று நாட்களில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு விஜய் இன்றாவது ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்புடன், பல கேள்விகளை தயார் செய்து அதிகாரிகள் காத்துக் கிடக்கின்றனர்.
மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பி விட்ட விஜய், ஐ.டி.அதிகாரிகள் முன் ஆஜராவது இன்றா? அல்லது நாளையா? என்பது புதிராக உள்ளது.
பிகில் படத்தின் அமோக வசூல், அதில் நாயகனாக நடித்த விஜய் வாங்கிய சம்பளம் ஆகியவை தொடர்பாக, 100 நாட்களை கடந்த பின், வருமான வரித்துறைக்கு திடீர் சந்தேகம் வந்து விட்டது.

வருமான வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற ரீதியில் நடிகர் விஜய், படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அகோரம், பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் மதுரை அன்புச் செழியன் ஆகியோரை குறிவைத்தது.
நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை, சென்னைக்கு பேக் அப் செய்து வந்து ஐ.டி.அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.விஜய்யின் பண்ணை வீட்டிலும் அலசி ஆராய்ந்து சோதனை நடத்தினர்.
ஆனால் சோதனையில் ஒன்றும் சிக்கவில்லை என்றும் வெறுங்கையுடன் அதிகாரிகள் திரும்பியதாகவும் கூறப்பட்டது. விஜய்யும் ஐ.டி விசாரணை முடிந்த அடுத்த நிமிடம் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்புக்கு நெய்வேலி சென்று விட்டார்.
அதே வேளையில் விஜய்யிடம் ஒன்றும் சிக்காவிட்டாலும், பைனான்சியர் அன்புச் செழியனின் வீடு, அலுவலகங்களில் 3 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் கையெமுத்திடப்பட்ட நிரப்பப்படாத செக்குகள், ஆவணங்கள் என ஏராளமானவை ஐ.டி.வசம் சிக்கின.
படத்தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதில் விஜய் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் நடிகர் விஜய், படத்தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச் செழியன் ஆகிய மூவருக்கும் நேரில் ஆஜராகுமாறு ஐ.டி.சம்மன் அனுப்பியது.
3 நாட்களில் ஆஜராகி, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி, முதல் நாளான நேற்று ஐ.டி. அதிகாரிகள் பல கேள்விகளுடன் தயாராக காத்திருந்தனர். ஆனால் விஜய்யோ நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தார். கல்பாத்தி அகோரம், அன்புச் செழியன் ஆகியோரும் ஆஜராகவில்லை.
இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்து நேற்றிரவே விஜய் சென்னை திரும்பி விட்டார். எனவே, இன்று விஜய் ஆஜராவாரா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனால் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு இடத்தில் குவிந்தது போல், வருமான வரி அலுவலகம் அமைந்துள்ள சென்னை சாஸ்திரி பவன் முன் விஜய் ரசிகர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.





