ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுப்பதில் இத்தனை மாதம் தாமதமா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரை நாங்கள் கேள்வி கேட்க முடியாது; தமிழக அரசே ஆளுநரிடம் விளக்கம் கேட்டு தகவல் தெரிவிக்குமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளனர். 28 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுள் தண்டனை முடிந்தும் சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யக் கோரி இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
எனவே, இவர்கள் 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தீர்மானம், தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட்டது.கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க இத்தனை மாதம் தாமதம் ஏன்? என தமிழக அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததே காரணம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தாமதம் ஏன்? என ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அழுத்தம் கொடுக்க முடியாது. தமிழக அரசு தான் ஆளுநரிடம் முறையிட்டு எப்போது முடிவெடுப்பார் என்பதை தெரிவிக்குமாறு கூறி வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் விரைந்து முடிவெடுப்பாரா? என்பது ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.