என்னா ஒற்றுமை..? காதலர் தினத்தில் பதவியேற்கிறார் கெஜ்ரிவால்..! 2015-ம் ஆண்டும் இதே நாள்தான்!!
கடந்த 2015-ம் ஆண்டில் டெல்லி முதல்வராக காதலர் தினமான பிப்ரவரி 14-ல் கெஜ்ரிவால் பதவியேற்றார். இதேபோல் இந்த முறையும் அதே பிப்.14 காதலர் தினத்தில் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 62-ல் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் கிடைத்துள்ளன.
காங்கிரசின் நிலைமை தான் படு மோசமாகி விட்டது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசால் 3 தொகுதிகளில் டெபாசிட்டை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்ற பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.
கடந்த 2015-ல் 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல், இம்முறை 5 தொகுதிகள் குறைந்து 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இம்முறை கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக அனைத்து அஸ்திரங்களையும் ஏவப்பார்த்தது.
ஆனால் டெல்லி வாசிகள், கெஜ்ரிவால் தான் பெட்டர் என ஆம் ஆத்மி க்கு அமோக வெற்றியை ஈட்டித் தந்துள்ளனர். கெஜ்ரிவாலின் இந்த வெற்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். இதனால் கெஜ்ரிவால் மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி முதல்வராக 3-வது முறையாக அரியணை ஏறும் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பாரபட்சமின்றி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக தரப்பில் பிரதமர் மோடி, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமோக வெற்றி பெற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், வரும் 14-ந் தேதி காதலர் தினத்தன்று முதல்வர் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. கடந்த 2015-ல் அமோக வெற்றி பெற்ற போதும், இதே பிப்ரவரி 14-ல் தான் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார்.
“இன்று அவருடைய மனைவி சுனிதாவுக்கு பிறந்த நாள். இந்த நாளில் தேர்தல் முடிவுகள் அமோக வெற்றிச் செய்தி வெளியாக மனைவி மற்றும் இரு மகன்களுடன் கட்சி அலுவலகத்தின் மேடையில் ஏறி உற்சாகமாக தொண்டர்களை சந்தித்தார் கெஜ்ரிவால்”
அப்போது தனது வெற்றியில் தமது மனைவி பிள்ளைகளுக்கும் பெரும் பங்கு உள்ளதாக கூறி பூரித்தார் கெஜ்ரிவால் .மேடையில் இருந்த கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும் உற்சாகமாக கையசைத்து தொண்டர்களை குஷிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




