இதுதாண்டா போலீஸ்…! பள்ளிக்கு டூவீலரில் வந்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பரஞ்ஜோதி எஸ்.ஐ…! திருப்பூரில் ருசிகர சம்பவம்!!
திருப்பூரில் பிரபல பள்ளி ஒன்றில், காலை நேரத்தில் பிள்ளைகளை அவசர, அவசரமாக இறக்கிவிட்டு திரும்பிய பெற்றோரை பள்ளிகேட்டை சாத்திவிட்டு வழிமறித்தார் போலீஸ் எஸ்.ஐ.. பெற்றோரே என்னவோ? ஏதோ ? என பீதியடைய, அந்த எஸ்.ஐ. படு அக்கறையாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது அனைவரின் பாராட்டை பெற்று விட்டது.
திருப்பூர் 15 வேலாயுதம்பாளையத்தில் உள்ளது பிரபல தனியார் பள்ளியான ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி . இங்கு 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். பல மாணவர்களை அவர்களின் பெற்றோர் இரு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து விடுவது வழக்கம். அப்படித்தான் இன்று காலை அவசர, அவசரமாக பள்ளியில் பிள்ளைகளை இறக்கி விட பல பெற்றோர் வந்தனர்.
பிள்ளைகளை இறக்கிவிட்டு திரும்பிய பல பெற்றோருக்கு, பள்ளி பிரதான கேட் அடைக்கப்பட்டு, கேட் முன் துடிப்பான எஸ்.ஐ. ஒருவர் போலீசாருடன் விறைப்பாக நின்றிருந்ததைக் கண்டு பெரிய அதிர்ச்சி ஆகிவிட்டது. டூவீலரில் மளமளவென வந்த பெற்றோர் அனைவரும் நிறுத்தப்பட்டனர். பெற்றோரோ என்னவோ? ஏதோ ? என பரிதவித்து நின்றனர்.

இப்படி சுமார் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் கூடியவுடன், அந்த துடிப்பான எஸ்.ஐ (பெயர் பரஞ்ஜோதி) பெற்றோர் அனைவரின் தலையைப் பார்த்தார். ஒருவர் தலையில் கூட ஹெல்மெட் இல்லை. உடனே விறுவிறுவென போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அறிவுரைகளை வழங்க ஆரம்பித்தார். பிள்ளைகளின் எதிர்காலம் மீது அக்கறை கொண்டு தானே, ஏகப்பட்ட பணம் செலவழித்து அக்கறையாக பள்ளிக்கு அழைத்து வந்து விடுகிறீர்கள்.
அப்படியே உங்கள் மீதும், உயிர் மீதும் அக்கறை காட்டலாமே? யாராவது ஹெல்மெட் அணிந்திருக்கிறீர்களா? வீடு அருகில் தானே என்று சாதாரணமாக நினைக்கிறீர்கள். சாலையில் செல்லும் போது ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என்று தெரியாது. பள்ளத்தில் கூட தடுக்கி விழலாம். ஹெல்மெட் இருந்தால் பாதுகாப்பு தானே?. நீங்கள் ஹெல்மெட் அணிந்து வந்தால் உங்கள் பிள்ளைகளும் பின்னாளில் உங்களைப் பின்பற்றுவார்கள் தானே? என பெற்றோருக்கு ரொம்ப அட்வைஸ்களை எஸ்.ஐ. பரஞ்ஜோதி வழங்கினார். குறிப்பாக தாய்மார்களுக்கும் எஸ்.ஐ. பரஞ்ஜோதி கூடுதல் அட்வைஸ்களை அக்கறையாக எடுத்துரைத்தார்.
அது மட்டுமின்றி, இனிமேல் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து ஓட்டுவோம் என பெற்றோர் அனைவரையும் உறுதி மொழி ஏற்கச் செய்தார். அதன்படி பெற்றோரும் சரி சரியென உற்சாகமாக உத்தரவாதம் அளித்ததுடன், எங்கே அபராதம் ஏதும் போடாமல், எஸ்.ஐ தங்களுக்கு நல்ல அட்வைஸ் செய்ததை பெற்றோர்கள் பலரும் பாராட்டிச் சென்றனர்.

வெறுமனே கண்டிப்பு, கறார் காட்டுவது, இல்லையெனில் வழக்குப் போட்டு அபராதம் கட்டச் செய்வது என்றில்லாமல் அன்பாக அட்வைஸ் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரஞ்சோதி போன்ற துடிப்பான அதிகாரிகளும் காவல்துறையில் இருப்பது மெச்சத்தக்கது.
“எஸ்.ஐ. பரஞ்சோதி, மாணவர்களின் பெற்றோரிடம் ஹெல்மெட் பற்றி மட்டும் அறிவுரை வழங்கவில்லை. மது குடித்துவிட்டு ஓட்டினால் என்ன விளைவு? எவ்வளவு அபராதம் என்றெல்லாம் எடுத்துக் கூறினார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர். அபராதமாக ரூ.10 ஆயிரம் என ஒரு மாச சம்பளத்தை தண்டமாக அழ வேண்டும். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே ஒரு மாதத்திற்கு சாப்பாட்டிற்கு கண்ணீர் விட்டு அழ வேண்டியிருக்கும். அப்படி குடித்தே ஆக வேண்டும் என்றால் வீட்டிற்கு வாங்கிப் போய் தனியாக ஒரமாக ஒரு இடத்தில் குடியுங்கள் எனவும் அன்பான அட்வைஸ் செய்தார். அது மட்டுமின்றி சாலை, போக்குவரத்து விதிகளை மீறினால் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு அபராதம் என்பதையும் எஸ்.ஐ. பரஞ்சோதி விலாவாரியாக விவரித்ததும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், அவரது இந்த செயல் சபாஷ் என சல்யூட் போட வைத்தது என்றும் கூறலாம்.”
📱 Share on WhatsApp 𝕏 Share on X




