ஜெயலலிதா பாணியில், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் முக்கிய ஆலோசனையை தொடங்கி உள்ளனர். இன்று 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடை பெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் இடைவெளி உள்ளது. இதனால் தமிழகத்தில் இப்போதே தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் பல கட்சிகளும் முனைப்பு காட்டத் தொடங்கி விட்டன. இடையில் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரப்போவது உறுதி என தகவல் வெளியாகி பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் ஆளும் . அதிமுக சார்பில், கட்சி வளர்ச்சிப் பணிகள், அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தல் தொடர்பான பணிகளை முடுக்கி விடத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக, ஜெயலலிதா நடத்தியது போல மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது .
இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை 4 நாட்களுக்கு காலை, மாலை என இடைவெளி விடாமல் இந்த ஆலோசனைக் கூட்டத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் நடத்துகின்றனர்.
சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர அதிமுக முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு கரூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை , பெரம்பலூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மாலையில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் களை கட்டியுள்ளது.