நடிகர் விஜயின் சம்பளம் எத்தனை கோடி? சினிமா வட்டாரங்கள் சொல்வது என்ன?
நடிகர் விஜய் பிகில் திரைப்படத்திற்காக முப்பது கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வருமானவரித் துறையினரிடம் கூறியுள்ளார். எந்தெந்த படங்களுக்கு விஜய் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது பற்றி திரை வட்டாரங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தென்னிந்திய திரை துறையில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதால் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்று திரைத்துறையில் கூறுகிறார்கள். விஜயின் வியாபாரம் படத்திற்கு படம் அதிகரித்து வரும் நிலையில் அவரின் ஊதியமும் உயர்ந்து கொண்டே வருகிறது. சுறா, காவலன், வேலாயுதம் போன்ற படங்களுக்கு 18 கோடி ரூபாய் ஊதியமாகப் பெற்றுள்ளார் விஜய்.
இந்தப் படங்களுக்குப் பின் வெளியான தெறி படத்திற்கு அவரின் ஊதியம் 28 கோடியாக உயர்ந்தது. அந்தப் படம் வசூல் ரீதியில் வெற்றியடைந்த நடையில் பைரவா படத்திற்கு 30 கோடி ரூபாயும், சர்க்கார் மற்றும் மெர்சல் ஆகிய படங்களுக்கு 40 கோடி ரூபாயும் ஊதியம் பெற்று உள்ளார் என்று திரைத்துறையினர் மத்தியில் பேச்சு உள்ளது.
படங்களின் வெற்றியை பொருத்து தன்னுடைய ஊதியத்தை உயர்த்தும் விஜய் பிகில் படத்திற்கு 51 கோடி ரூபாய் ஊதியம் பெற்று உள்ளார் என்று கூறப்படுகிறது. அதைப்போல தற்போது விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் மாஸ்டர் படத்துக்கு 75 கோடி ரூபாய் ஊதியம் பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் அடுத்ததாக அவர் நடிக்க உள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடமும் இதே ஊதியத்தை பேசி முடித்துள்ளார். இந்த ஊதியங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் தமிழ் திரைத்துறையினர் மத்தியில் இந்த தகவல்கள் உறுதி என்று கூறுகின்றனர். விஜய்யின் ஊதியம் திரைத் துறையினரின் தகவலின்படி 75 கோடியைத் தொட்டுவிட்டது. ஆனால் பிகில் திரைப்படத்திற்கு முப்பது கோடி ரூபாய் மட்டுமே பெற்றதாக வருமான வரித் துறையிடம் விஜய் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




