நடிகர் யோகி பாபுவுக்கு திடீர் கண்ணாலம் குலதெய்வ கோவிலில் எளிமையாக நடந்தது
தமிழ் திரையுலகில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் நடிகர் யோகி பாபு, இன்று மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கரம் பிடித்து திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். குலதெய்வம் கோவிலில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தமிழ் திரையுலகில், கால் நூற்றாண்டாக காமெடியில் கலக்கி வந்த வைகைப்புயல் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக காணாமலே போய் விட்டார். 2011-ல் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்த வடிவேலுவுக்கு கெட்ட காலமாகி விட்டது என்றே கூறலாம்.
அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போக, கதாநாயகனாக நடித்த சில படங்களும் ஊத்திக் கொள்ள, வடிவேலுவை திரையில் காண்பதே அரிதாகி விட்டது. இதனால் தற்போது தமிழ் திரையுலகில் வடிவேலுவின் இடத்தை யோகி பாபு ஆக்கிரமித்து விட்டார் என்று கூறலாம்.
குள்ளமான உயரம், கருத்த நிறம், வித்தியாசமான பரட்டைத் தலைமுடியுடன் திரையில் தோன்றும் யோகிபாபுவுக்கும் ரசிகர் பட்டாளம் அதிகமாகவே உள்ளது. ரஜினி உள்ளிட்ட பிரபலங்களின் படங்களில் நடித்து வரும் யோகிபாபு தான், தற்போது தமிழ் திரையுலகின் நெ.1 காமெடியன் ஆகிவிட்டார்.
யோகி பாபுவுக்கும் நடிகை ஒருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்றதாக கடந்த மாதம் கசமுசா எழுந்தது. ஆனால் இதனை மறுத்த யோகி பாபு, தமது திருமணம் அனைவருக்கும் தெரிந்தே நடைபெறும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் திடீரென யோகி பாபு திருமணம் இன்று காலை நடைபெற்று முடிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
செய்யாறு அருகே மேல் நகரம்பாடு கிராமத்திலுள்ள விநாயகர் கோவிலில் வைத்து மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு கரம் பிடித்த புகைப்படங்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பாகி உள்ளது.
அதிகாலை 4.30 மணிக்கு எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் யோகி பாபுவின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். யோகி பாபுவின் திடீர் திருமணம் பற்றிய தகவல் வெளியான நிலையில், திரையுலகினர் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




