தஞ்சை பெரிய கோவில் “குடமுழுக்கு விழா” கோலாகலம்..! 5 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம்!!

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கை காண 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் தஞ்சை நகரமே திருவிழாக் கோலம் பூண்டது.

 

தஞ்சையைத தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சோழ மன்னர்கள் காலத்தில், ராஜராஜ சோழ மன்னனால் பிரமாண்டமாக கட்டப்பட்டது பெரிவுடையார் கோவில். மலைகளே இல்லாத சமதளப் பகுதியில் முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட இந்தப் பெரிய கோவில் ஒரு அதிசயம் தான்.

 

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குட முழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடை பெற்று வந்தது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜையுடன் குடமுழுக்குக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளின் புனித ஆறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டண பின்னர் காலை 9.30 மணிக்கு கோயிலின் ராஜகோபுரத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.

 

கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்திப் பரவசத்துடன் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து கோபுரங்களின் கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

 

தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது கோபுரங்களின் மேலாக வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

 

குடமுழுக்கை காண திரண்டிருந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிலைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் திரண்டிருந்தனர்.ராஜகோபுரத்தில் நடைபெற்ற குடமுழுக்கை பக்திப் பரவசத்துடன் கண்டு பரவசமடைந்தனர்.

தொடர்ந்து காலை 10 மணிக்கு பெரிவுடையார் கோவிலில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.குடமுழுக்கு விழாவை எந்த மொழியில் நடத்துவது என்ற சர்ச்சை எழுந்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

 

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்தபடி, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட்டது.

 

குடமுழுக்கு விழாவைக் காண, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் நேற்று முதலே தஞ்சைக்கு படையெடுத்தனர். இப்படி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்ட தான் தஞ்சை நகரமே திருவிழாக்கோலம் பூண்டது.

 

பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்.கோவிலுக்கு ஒரு கி.மீ. அப்பாலேயே பக்தர்களை ஒழுங்குபடுத்தி வெவ்வேறு தெருக்களில் அனுப்பி வைத்ததால் எவ்வித சிரமமுமின்றி பக்தர்கள் குடமுழுக்கு விழாவை கண்டு தரிசித்தனர்.

 


Leave a Reply