குற்றவாளிகளுக்கு 7 நாள் கெடு நிர்பயா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
நிர்பயா பாலியல் கொலை வழக்கு கைதிகள் 4 பேருக்கும் கடந்த ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தடை செய்து டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜனவரி 31ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசு, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அடுத்த 7 நாட்களுக்குள் சட்டரீதியாக உள்ள அனைத்து நிவாரணங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஏழு நாட்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அதிகாரிகள் சட்ட ரீதியாக தமது கடமையை செய்யலாம் என்று அவர் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி நீதிமன்ற விசாரணை நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுத்து விட்ட அவர் முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோர் அனைத்து சட்ட நிவாரணங்களும் பயன்படுத்தி விட்டதால் அவர்கள் இருவரையும் மட்டுமாவது முதலில் தூக்கில் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 இன் படி இறுதி மூச்சு நிற்கும் வரை தம்மை காப்பாற்றிக் கொள்ளும் உரிமை இந்த குற்றவாளிகளுக்கு இருப்பதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




