விறுவிறுப்பாக நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்!
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்ற நிலையில் அவர்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து காலியாக உள்ள இத்தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கவுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என இத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் தற்போது தவெக வேட்பாளராகக் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பாக சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதேபோல தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய சத்தியபாமா தற்போது தவெக வேட்பாளராகக் களம் காண்கிறார். இந்த தொகுதியில் திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ கட்சி சார்பாக லட்சுமணன், நாம் தமிழர் கட்சியிலிருந்து கார்த்திகா என 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தட்டாஞ்சாவடியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குகள் வரும் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதற்கிடையே, தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரியில் 5 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் அசாமில் ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், நந்திகிராம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் சஞ்சிதா டே கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, காங்கிரசுக்கு மம்தா ஆதரவு தெரிவித்தார். அதன்பின் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான், பழைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதுடன், அதற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்ததாலும் அவர் போட்டியிடுகிறார். நந்திகிராம் இடைத்தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோல் அசாமில் நாகோன் தொகுதி எம்.பி., பிரத்யுத் போர்டோலோய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வருகின்ற 9ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





