--- --:--:-- --

விவசாயிகளை ‘சி.இ.ஓ’வாக மாற்ற ஆனந்த் அம்பானி புதிய திட்டம்!

8

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வறட்சிப் பகுதியான ராயலசீமாவைச் செழிப்பான மண்டலமாக மாற்றும் வகையில், அன்னமய்யா மாவட்டம் மதனாபல்லியில் ‘உலகளாவிய தோட்டக்கலை மையம்’ மற்றும் ‘இந்திய வேளாண்மைப் பள்ளி’ அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதல்வர் நர சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, “என்னை ஆந்திராவின் மகனாகக் கருதுங்கள்.

 

 

ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர் சந்திரபாபு நாயுடு எனக்கு வழிகாட்ட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். அவரது உரையைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரைப் பாராட்டினார். அனந்த் அம்பானியின் வாக்குறுதியைத் தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரை அன்புடன் ஆரத்தழுவி வாழ்த்தினார்.

 

இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் பாணியில் உருவாக்கப்படும் இந்த இந்தியன் ஸ்கூல் ஆப் அக்ரிகல்ச்சர், விவசாயிகளைத் தங்களது நிலங்களின் ‘சி.இ.ஓ’ ஆக மாற்றும் என்று அனந்த் அம்பானி குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பூச்சிக் தாக்குதல்களைத் தடுப்பது, துல்லியமான விவசாயம் மூலம் நீர் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவது போன்ற வசதிகள் இங்குச் செய்து தரப்படும்.

 

ரிலையன்ஸ் நிறுவனம் பசுமை ஆற்றல் திட்டங்களின் கீழ் சிபிஜி ஆலைகளை அமைக்க ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகள் எரிசக்தி உற்பத்தியாளர்களாக மாறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ‘வந்தாரா’ திட்டம் மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் ஹைடெக் கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தப் போவதாகக் கூறினார்.

 

ஆந்திராவில் தொழில்களை எளிதாகத் தொடங்கும் சூழல் உள்ளதால், ரூ.14 லட்சம் கோடி மதிப்பில் 388 மெகா முதலீடுகள் வந்துள்ளதாகவும், இதன் மூலம் 11 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அனந்த் அம்பானி சுட்டிக்காட்டினார். ராயலசீமா தோட்டக்கலை மையத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் முழு ஆதரவை அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon