திருப்பூர் மாவட்டம், அலகுமலை “ஜல்லிக்கட்டு” திருவிழா..!  சீறும் காளைகளுடன் “மல்லுக்கட்டிய” காளையர்கள்!!

திருப்பூர் அருகே அலகுமலையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஜல்விக்கட்டு திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. சீறி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் வீராவேசம் காட்டினர்.

 

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு. தைப்பொங்கல் என்றாலே இனிக்கும் பொங்கல், தித்திக்கும் கரும்புக்கு அடுத்து ஜல்லிக்கட்டு தான் ஞாபகத்துக்கு வரும்.  ஆதிகாலம் முதலே தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிப்போன இந்த வீர விளையாட்டுக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு தடை வந்தது. எங்களின் வீர, பாரம்பரிய விளையாட்டுக்கு தடையா? என தமிழகமே பொங்கி எழுந்தது.

குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் கொதித்தெழுந்தனர். தமிழகமே 3 நாட்களுக்கு ஸ்தம்பிக்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடந்தது.  அதுமட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்க, பல நாட்களாக நடந்த உணர்ச்சிமிகு போராட்டத்தின் காரணமாக தடை தகர்ந்தது. உலகம் முழுக்க ஜல்லிக்கட்டின் புகழ் மென்மேலும் பன்மடங்கு பெருகியது.

 

பொதுவாக பொங்கலை முன்னிட்டு மதுரையை மையப்படுத்தி சுற்றியுள்ள திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற தென் மாவட்டங்களில் தான் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெறும். என்றைக்கு ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதோ அது முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்த அந்தப்பகுதி மக்களும் ஆர்வம் காட்டி நடத்த தொடங்கினர்..

அப்படித்தான், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கமும் இணைந்து கொங்கு மண்டலத்தின் மையமான திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு திருவிழாவை கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 20 ஏக்கரில் பிரத்யேகமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு 2018 முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது. இதனை இப்பகுதி மக்கள் ஒரு திருவிழாபோல் ஆயிரக்கணக்கில் பங்கேற்று கொண்டாடி மகிழ்கின்றனர்.

 

இன்று 3-வது ஆண்டாக அலகுமலையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்தது. தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில் 784 காளைகள் ஆவேசமாக சீறிப் பாய, 7 பிரிவில் 600-க்கும் மேற்பட்ட  வீ ரர்கள் விட்டேனா பார்?  என காளைகளின் திமிலை அடக்கும் திமிருடன் வீராவேசத்துடன் காளைகளுடன் மல்லுக்கட்டி ஜெயித்தார். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

சிறந்த மாடுபிடி வீரர்: 12 மாடுகளை பிடித்த வெளத்தூரை  சேர்ந்த ஜெகதீஸ் சிறந்த மாடுபிடி வீரராகவும், 11 காளைகளை பிடித்த கருப்பாயூரணியை சோ்ந்த காா்த்திக்  2வது பரிசையும் , 9  காளைகளை பிடித்த திண்டுக்கல் கார்த்தி 3 வது பரிசையும் தட்டி சென்றனர்.

 

சிறந்த காளை: மாடுபிடி வீரர்களைப் போல் காளைகளும் பரிசுகளைக் குவித்தன. ஜல்லிக்கட்டு நிறைவில், புதுக்கோட்டையை சோ்ந்த கட்டப்பா  காளை  முதல் பரிசை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திருச்சி  மாவட்டத்தைச் சேர்ந்த சாமிரவியின் காளை  2-ம் இடம் பெற்று  பரிசைப் பெற்றது.  மூன்றாம் பரிசை  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளரான அனுராதாவின் காளை  பெற்றது.

.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் சுகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல்,கோவை மாநகராட்சி கமிஷனர் ஸ்வரன் குமார், எம்.எல்.ஏ க்கள் தனியரசு, விஜயகுமார், குணசேகரன் உள்பட மாவட்ட உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். ஜல்விக்கட்டு நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளதால் வழக்கம்போல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு களை கட்டியுள்ளது. விழாவுக்காக பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டு இருந்தது.


Leave a Reply