எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு..! தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்!!
களியக்காவிளை காவல் சிறப்பு எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன், கடந்த மாதம் 8-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய தவ்பீக், அப்துல் சமீம் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலையில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்து, சென்னை, பெங்களூரூ , கேரளாவில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ம்ற்றும் அரிவாள் போன்றவையும் கைப்பற்றப்பட்டன. இந்தக் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பெங்களூருவில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்ததற்கு பழி வாங்கவே, எஸ்.ஐ.வில்சனை கொன்றதாக பிடிபட்ட கொலையாளிகள் கூறினாலும், தென் மாநிலங்களில் மேலும் பல இடங்களில் இது போன்ற சதித் திட்டத்தில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




